உள்ளூர் தொடரில் இருந்தும் சர்பராஸ் கான் விலகல்

மும்பை, செப்டம்பர் 1- இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற லட்சியத்துடன், தனது உடற்தகுதியைக் கூட்டி, உள்ளூர் போட்டிகளில் ரன் மழை பொழிந்து வந்த இளம் வீரர் சர்பராஸ் கானின் கனவில் இடி விழுந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் முக்கியமான உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபி தொடரிலிருந்து அவர் விலகியிருப்பது, அவரது இந்திய டெஸ்ட் அணி வாய்ப்பில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக தனது உடற்தகுதியை மேம்படுத்த கடுமையாக போராடி வந்த சர்பராஸ் கான், சுமார் 17 கிலோ வரை எடையைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன் பலனாக, சமீபத்தில் நடைபெற்ற புச்சி பாபு தொடரில் மும்பை அணிக்காகக் களமிறங்கி, அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி மிரட்டினார். இந்த சிறப்பான ஃபார்ம், இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் இடம்பிடிப்பதற்கான அவரது வாய்ப்பை மீண்டும் பிரகாசமாக்கியது. சரியான நேரத்தில் தாக்கிய காயம்! இந்த அதிரடி ஃபார்முடன், துலீப் டிராபி தொடரில் மேற்கு மண்டல அணிக்காக விளையாட சர்பராஸ் கான் தேர்வாகியிருந்தார். செப்டம்பர் 4-ம் தேதி தொடங்க உள்ள அரையிறுதிப் போட்டியில் மத்திய மண்டல அணியை எதிர்கொள்ள அவர் தயாராகி வந்தார். ஆனால், புச்சி பாபு தொடரில் ஹரியானாவுக்கு எதிராக சதம் அடித்த போட்டியின்போது, அவருக்கு தொடையில் (quadriceps) காயம் ஏற்பட்டது. இந்தக் காயம் குணமடைய சுமார் 3 வாரங்கள் ஆகும் என்பதால், துலீப் டிராபி தொடரிலிருந்து அவர் முழுமையாக விலகியுள்ளார். இதுகுறித்து வெளியான தகவலில், “சர்பராஸ் கான் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திற்கான மறுவாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடம்பிடிக்க, துலீப் டிராபி ஒரு முக்கியமான வாய்ப்பாகக் கருதப்பட்டது. இதில் சிறப்பாகச் செயல்பட்டு, தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சர்பராஸ் கானுக்கு, இந்தத் திடீர் காயம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.