புதுடெல்லி, செப்டம்பர் 1- அரசியல் சட்டத்தின், 130வது திருத்த மசோதா சமீபத்தில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பிரதமர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என, அரசு நிர்வாக பதவியில் இருக்கும் எவரும், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்தால், அவர்கள் பதவி வகிக்கும் தகுதியை இழப்பர் என்கிறது, இந்த சட்ட திருத்த மசோதா.அதாவது, பிரதமரின் ஆலோசனையின் பேரிலோ அல்லது நேரடியாகவோ அமைச்சர்கள் மற்றும் பிரதமரை, ஜனாதிபதி பதவிநீக்கம் செய்யலாம். மாநில அமைச்சர்களை முதல்வரின் ஆலோசனைப்படி கவர்னர் நீக்கலாம் அல்லது மாநில முதல்வரை கவர்னர் நேரடியாக பதவி நீக்கலாம் அல்லது அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பது உட்பட பல விதிமுறைகள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன. அதனால், ‘இம்மசோதா அரசியலில் நல்லாட்சி யையும், ஒழுக்கத்தையும் வலுப்படுத்த உதவும்’ என்று, ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்டாலும், ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட, இந்த மசோதா பெரிதும் உதவும்’ என, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பொது வாழ்வில் இருப்பவர்கள் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் தான். அதே நேரத்தில், பழிவாங்கும் நடவடிக்கையாக ஒருவர் மீது பொய் புகார்கள் கூறப்படும் போது, அதுபற்றி தீர விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும். அதற்கு பதிலாக, உரிய நடைமுறையை தவிர்த்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வது சரியானதல்ல.அது மட்டுமின்றி, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், எதிர்க்கட்சிகள் மற்றும் அந்தக் கட்சிகளின் அமைச்சர்களை குறிவைக்க, மத்திய அரசின் கைகளில் கிடைத்த மற்றொரு ஆயுதமாகவே இருக்கும். சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் என்றும் புகார் கூறப்படுகிறது. தற்போதுள்ள சட்டங்களும், அதை அமல்படுத்த பின்பற்றப்படும் நடைமுறைகளும், பொது வாழ்வில் உள்ளவர்களை குறிப்பாக, மத்திய, மாநில அரசுகளில் உயர் பொறுப்பு வகிக்கும் அரசியல்வாதிகளை பாதுகாப்பதாக உள்ளது.















