டிரம்ப் ஆலோசகர் மீது அரசியல் தலைவர்கள் பாய்ச்சல்

புதுடில்லி: செப்.2- ‘இந்திய மக்களின் செலவில், பிராமணர்கள் லாபமடைந்து வருகின்றனர்’ என, அமெரிக்க அதிபர் டிரம்பின் வணிக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததால், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி அறிவித்தார். இதனால், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்காவிடம் இருந்து வலுவான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க சமூகத்தில் உயர்வான அந்தஸ்தில் இருக்கும் பெரும் பணக்காரர்கள், ‘பாஸ்டன் பிராமணர்கள்’ என விமர்சிக்கப்படுகின்றனர்.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்வான அந்தஸ்தில் இருப்பவர்களை அமெரிக்காவில் இப்படி குறிப்பிடுகின்றனர்.
இந்த சொலவடையை பயன்படுத்தி, இந்திய மக்களின் செலவில், பிராமணர்கள் பெரும் லாபம் சம்பாதித்து வருகின்றனர் என அதிபர் டிரம்பின் வணிக ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றஞ்சாட்டினார்.
பீட்டர் நவரோவின் இந்த கருத்துக்கு நம் நாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினரான சஞ்சீவ் சன்யால், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.