தங்கம் விலை முதல் முறையாக 78,000-ஐ கடந்தது

சென்னை: செப். 3-
தங்கம் விலை கடந்த ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ.3,700 உயர்ந்தது. இந்நிலையில், சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து 3,600 டாலரை எட்டியுள்ள நிலையில் இன்று இந்தியாவில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் இன்று சவரனுக்கு ரூபாய் 640 உயர்ந்து ரூ.78,440க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,805 க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் இவையே முக்கிய காரணிகளாக உள்ளன. அமெரிக்கா, இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடைசியாக கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி தங்கம் விலை முதல் முறையாக சவரனுக்கு ரூ.75,000-ஐ கடந்தது. தொடர்ந்து, ஆகஸ்ட் 8 ஆம் தேதி ரூ.75,760 என தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன் பிறகு தொடர்ந்து தங்கம் விலை 10 நாட்களுக்கும் மேலாக குறைந்து கொண்டே வந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மகிழ்ச்சி நிலைக்காத அளவுக்கு மீண்டும் படுவேகமாக உயரத் தொடங்கியது தங்கம் விலை. அதிகபட்சமாக 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு சவரன் ரூ. 76,960- க்கு விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூபாய் 73 ஆயிரத்தை தொட்ட நிலையில் மாதத்தின் முடிவில் ரூ 76 ஆயிரத்தை தாண்டியது.