புதுடெல்லி: செப். 4:-
அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் கர்ரேகுட்டா மலையில் சிஆர்பிஎப். வீரர்கள், சத்தீஸ்கர் மாநில காவல்துறை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து நடத்திய ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்’ நடவடிக்கைக்கு அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது: ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்டின் போது வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சலும் வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயமாக நினைவுகூரப்படும். தொடர்ச்சியாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும்,
பாதுகாப்புப் படையினர் மிகுந்த மன உறுதியுடன் நடவடிக்கையை மேற்கொண்டு பெரிய நக்சல் தள முகாமை வெற்றிகரமாக அழித்தனர். கர்ரேகுட்டா மலையில் நிறுவப்பட்ட நக்சல்களின் கிடங்கு, விநியோகச் சங்கிலியை சத்தீஸ்கர் காவல்துறை, சிஆர்பிஎஃப், டிஆர்ஜி மற்றும் கோப்ரா பணியாளர்கள் வீரத்துடன் அழித்தது பாராட்டுக்குரியது.
நாட்டின் வளர்ச்சியடையாத சில பகுதிகளில் நக்சல்கள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை சீர்குலைந்துள்ளனர். மேலும் அரசு நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்துள்ளனர். தொடர்ச்சியான நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, பசுபதிநாத் முதல் திருப்பதி வரையிலான பகுதியில் உள்ள சுமார் 6.5 கோடி மக்களின் வாழ்க்கையில் ஒரு ‘‘புதிய சூரிய உதயம்’’ ஏற்பட்டுள்ளது. நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கடுமையான காயமடைந்த பாதுகாப்புப் பணியாளர்களை ஆதரிக்க பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை அரசு உறுதி செய்யும். வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சல்வாதத்தை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும்.
வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓயாது. பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம்,
இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற உறுதி பூண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.















