அசுர வேகத்தில் முன்னேறும் பிரிக்ஸ் – அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது

புதுடெல்லி, செப்டம்பர் 6- அமெரிக்கா தலைமையிலான ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலிமை கொண்டதாக தெரிந்தாலும், அது பெயரளவுக்கு மட்டுமேதான் என நிதி ஆலோசகர் சி.ஏ. நிதின் கௌசிக் விமர்சித்திருக்கிறார். தற்போது ஜி7 நாடுகளின் இடத்தை பிரிக்ஸ் வேகமாக கைப்பற்றி வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, “உலகின் தலைமைப் பொருளாதார மற்றும் அரசியல் சக்தியாக அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது. இது கடுமையான உண்மை. அமெரிக்காவின் வீழ்ச்சி, கடந்த காலப் பேரரசுகளின் சரிவை ஒத்திருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளாக அமெரிக்கா இடைவிடாமல் வளர்ந்தது. ஆனால், அதன் உச்சநிலை 12-15 ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டுவிட்டது. இப்போது ஒவ்வொரு பேரரசும் எதிர்கொள்ளும் அதே சரிவுப் பாதையில் அமெரிக்காவும் சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சரிவு அரசியல் ரீதியானது மட்டுமல்ல, பணம், சக்தி, மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றங்களாலும் உருவானது.
உலகளாவிய அதிகார மாற்றம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பெயர் அளவில், ஜி7 நாடுகள் (அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா) உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 43% கட்டுப்படுத்துகின்றன. ஆனால்,
பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) கிட்டத்தட்ட 29 டிரில்லியன் டாலர் (ரூ.25 லட்சம் கோடி), அதாவது உலகப் பொருளாதாரத்தில் 28% பங்களிப்புடன் வேகமாக முன்னேறி வருகின்றன. கொள்முதல் சக்தி சமநிலை அடிப்படையில், பிரிக்ஸ் நாடுகள் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 35% பங்கு வகிக்க, ஜி7 நாடுகள் 30% மட்டுமே கொண்டுள்ளன. இதன் மூலம் உலகப் பொருளாதார சமநிலை ஏற்கெனவே மாறிவிட்டது. இந்த மாற்றம் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது. இந்த உலகளாவிய மாற்றத்தின் முக்கிய உந்துசக்திகளாக சீனாவும், இந்தியாவும் இருக்கின்றன.
சீனாவின் பொருளாதாரம் 19.2 டிரில்லியன் டாலராகவும் (ரூ.16 லட்சம் கோடி), இந்தியாவின் பொருளாதாரம் 4 டிரில்லியன் டாலராகவும்(ரூ.3.5 லட்சம் கோடி) வளர்ந்துள்ளது. இந்தியா அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சும் நிலையில் உள்ளது. கடந்த 2024 இல் 6.5% அல்லது அதற்கும் அதிகமான வளர்ச்சியுடன், பெரிய அளவிலான உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் உலக வர்த்தக ஒருங்கிணைப்புடன் இந்தியா முன்னேறி வருகிறது.