வாஷிங்டன்: செப். 8-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லியே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்திருந்தது. இதனால் இரு நாட்டு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே ரஷ்யா எண்ணெய் வாங்குவோர் மீது இன்னும் கூடுதல் வரியை விதிக்கத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க டிரஷரி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு கடந்த பல ஆண்டுகளாகவே சீராக இருந்து வந்தது. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி என யார் வந்தாலும் இந்தியா உடன் சீரான உறவையே வைத்திருப்பார்கள். அதிபர் டிரம்ப் 2016- 2020 வரை முதலில் அதிபராக இருந்த போதும் இரு நாடுகளுக்கும் இடையே சீரான உறவே இருந்தது. ஆனால், டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அதுபோல இல்லை.
அதாவது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு மேலும் வரியை விதித்தால் ரஷ்யப் பொருளாதாரம் சரிந்துவிடும் என்று ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து உர்சுலா தன்னையும் தொடர்பு கொண்டு ரஷ்யா மீது மேலும் அழுத்தம் கொடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதித்ததாக பெசென்ட் கூறினார். ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் ஆனால் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “உக்ரைன் ராணுவம் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? ரஷ்யப் பொருளாதாரம் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்று இரண்டிற்கும் இடையே போட்டி தான் இப்போது இருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். குறிப்பாக ரஷ்யக் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்க வேண்டும். அப்படி வரிகளை விதித்தால் ரஷ்யப் பொருளாதாரம் முற்றிலும் சரிந்துவிடும். அதுதான் ரஷ்ய அதிபர் புதினை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும்” என்றார். இந்தியாவுக்கு சிக்கல்? அதாவது பெசென்ட் நேரடியாக இந்தியா என்ற பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். தற்போதைய சூழலில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும் சீனாவும் மட்டுமே அதிகமாகக் கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. அதில் சீனா மீது அமெரிக்கா வரிகளை விதிக்காது. எனவே, கூடுதல் வரி விதித்தால் அது இந்தியாவையே மேலும் மோசமாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தியாவுக்கு மேலும் சிக்கலை தரும் டிரம்ப் – அமெரிக்கா திட்டம் என்ன ?















