ஜெருசலேத்தில் நொடிப்பொழுதில் பறிபோன 6 உயிர்கள்

ஜெருசலேம்: செப்டம்பர் 9-
இஸ்ரேலின் ஜெருசலேம் பகுதியில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். திடீரென நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20+ பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாகப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக இஸ்ரேலைச் சுற்றிலும் பதற்றம் அதிகமாகவே இருக்கிறது. அங்குப் பல ஆண்டுகளாகப் போர் தொடரும் நிலையில், அது முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை.
6 பேர் உயிரிழப்பு இதற்கிடையே ஜெருசலேத்தில் நேற்று மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்துள்ளது. ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் அருகே பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் இருவர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்த அப்பாவி மக்களைக் குறிவைத்து இவர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் காரணமாகச் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.
இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது உயிரிழந்தனர். இதன் மூலம் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. மேலும், ஏழு பேர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.