மசோதாக்களில் முடிவெடுக்க கவர்னருக்கு காலக்கெடு?

டெல்லி: செப். 10-
மசோதாக்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயம் செய்திருந்தது. இது தொடர்பாக ஜனாதிபதியின் விளக்கக் குறிப்பு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு ஏற்கனவே தனது வாதங்களை முன்வைத்துவிட்ட நிலையில், இப்போது மாநில அரசுகள் தங்கள் வாதங்களை முன்வைத்து வருகிறது. அதன்படி இன்று பஞ்சாப் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்களில் முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு அப்போதே மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளைக் கொண்ட விளக்கக்குறிப்பை அளித்திருந்தார்.
அந்த விளக்கக் குறிப்பு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. அதேநேரம் இது விளக்கக் குறிப்பு தொடர்பான விசாரணை மட்டுமே என்றும் முந்தைய உத்தரவுகளை இந்த விசாரணை மாற்றாது என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. இந்த வழக்கில் முதலில் மத்திய அரசு தனது வாதங்களை முன்வைத்த நிலையில், தொடர்ச்சியாக மாநில அரசுகள் தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றன. ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு வாதங்களை முன்வைத்து வருகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் பாஜக ஆளும் மாநிலங்கள் காலக்கெடு விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் காலக்கெடு சரியானது என்ற வாதத்தை முன்வைத்து வருகிறது.குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் காலக்கெடு நிர்ணயம் செய்தது சரியானது என்றே வாதத்தை முன்வைத்தது. மேலும், குடியரசுத் தலைவரின் விளக்கக் குறிப்பு மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அதை அப்படியே திருப்பி அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் என்பவர் சூப்பர் சிஎம் போல செயல்பட முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.