வாஷிங்டன்: செப். 11-
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் நேற்று முதல் இடத்தை பிடித்தார். ஆனால் சில மணி நேரங்களில் மீண்டும் எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார்.
உலகின் பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான நம்பர் ஒன் பணக்காரர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், 385 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்த எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் பின்னுக்குத் தள்ளினார். இவரது சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
கடந்த 2021ம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதல்முறையாக முதலிடத்திற்கு முன்னேறினார். அதன்பிறகு, அமேசானின் ஜெப் பெசோஸ் மற்றும் எல்விஎம்எச்-ன் பெர்னார்டு அர்னால்ட்டிடம் முதலிடத்தை இழந்தார்.
கடந்த ஆண்டு மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய எலான் மஸ்க், 300 நாட்களுக்குப் பிறகு அந்த இடத்தை பறிகொடுத்தார். 81 வயதான எல்லிசன் ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைவருமான லேரி எல்லிசனின் பெரும்பாலான சொத்துக்கள் அவரது நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒராகிள் நிறுவனத்தின் பங்குகள் ஏற்கனவே அதிகரித்து காணப்பட்ட நிலையில், புக்கிங்கில் எழுந்த வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் நம்பிக்கையளிக்கும் அறிவிப்புகளால், அந்த நிறுவனத்தின் பங்குகள் மேலும் 41 சதவீதம் அதிகரித்தன.

















