புல்லட் ரயிலுக்கு தெலங்கானா முதல்வர் ஒப்புதல்

ஹைதராபாத், செப். 12- தெலங்கானா மாநிலத்தின் ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய ரயில்வே திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம், ஹைதராபாத்தின் ஷம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு ஒரு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஆசை தெரிவித்திருப்பதுதான்! ஹைதராபாத், சென்னை ஆகிய இரு பெரும் மாநகரங்களையும் இணைக்கும் இந்த அதிவேக ரயில் திட்டம் குறித்து, அதிகாரப்பூர்வமாகப் பரிசீலிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது ஒருவேளை நிஜமானால், இரு மாநிலங்களுக்கும் இடையிலான பயண நேரம் வெகுவாகக் குறையும். தமிழக மக்களும், தெலங்கானா மக்களும் இனி சில மணிநேரங்களிலேயே புல்லட் ரயிலில் பயணம் செய்யலாம். மற்ற திட்டங்கள் என்னென்ன? இத்துடன், மேலும் பல அதிரடி திட்டங்களையும் அவர் முன்வைத்தார்: பாரத் ஃபியூச்சர் சிட்டி: ஹைதராபாத்தில் அமையவுள்ள ‘பாரத் ஃபியூச்சர் சிட்டி’யிலிருந்து ஆந்திராவின் தலைநகரமான அமராவதி வழியாக, மசூலிப்பட்டினம் துறைமுகத்திற்குச் செல்லும் பசுமைவழி நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் ஒரு புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். பிராந்திய வட்ட ரயில் (Regional Ring Rail): ஹைதராபாத்தைச் சுற்றி அமையவுள்ள பிராந்திய வட்டச் சாலையுடன் (RRR) இணையும் வகையில், பிராந்திய வட்ட ரயில் சேவைக்கான திட்டங்களையும் தயாரிக்க வேண்டும். தெலங்கானாவை எதிர்காலத்தில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்மாதிரியாக மாற்றும் முயற்சியில், ரேவந்த் ரெட்டியின் இந்தப் புதிய ரயில்வே திட்டங்கள் முக்கியமான படிகளாகக் கருதப்படுகின்றன. சாதகமான சூழ்நிலை அமைந்தால், சென்னை – ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம் தென்னிந்தியாவின் ரயில்வே வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!