துபாய், செப். 14- 2025 ஆசிய கோப்பை தொடரில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில்,
இந்திய அணிக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில், வலைப்பயிற்சியின்போது காயம் அடைந்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல்,
இந்திய ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இன்று (செப்டம்பர் 14) இரவு 8 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்தப் போட்டிக்கான இறுதி கட்டப் பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று மாலை நடந்த வலைப்பயிற்சியின்போது, சுப்மன் கில்லின் கையில் பந்து பலமாகத் தாக்கியுள்ளது. பந்து பட்டவுடன்,
அவர் வலியால் துடித்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக, அணியின் பிசியோ விரைந்து வந்து அவருக்கு முதலுதவி அளித்தார். சிறிது நேரம் வலியால் அவதிப்பட்ட கில், பயிற்சியை பாதியிலேயே முடித்துவிட்டு வெளியேறினார். பின்னர், காயம்பட்ட கையில் ஐஸ் பேக்கை வைத்துக்கொண்டு, ஐஸ் பாக்ஸின் மீது அவர் அமர்ந்திருந்த காட்சி, கவலையை மேலும் அதிகரித்தது.




















