மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை?

லக்னோ, செப். 17- நாடு முழுக்க தெருநாய் பிரச்சினை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் சூழலில் இது தொடர்பாக உபி அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய் காரணமே இல்லாமல் இரு முறை மனிதர்களைக் கடித்தால் அந்த நாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது போல, ஆயுள் முழுக்க காப்பகத்தில் அடைக்கப்படுமாம். கடந்த சில காலமாகவே இந்தியாவில் தெருநாய் பிரச்சினை மிக மோசமான ஒன்றாக மாறியிருக்கிறது. தெருநாய் பிரச்சினையைக் கையாள உச்ச நீதிமன்றமும் கடந்த மாதம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. உபி அரசு உத்தரவு இதையடுத்து வேக்சின், கருத்தடை பணிகளை எல்லா மாநில அரசுகளும் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. இந்தச் சூழலில் தான் உத்தரப் பிரதேச அரசு வினோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு மனிதனைக் காரணமின்றிக் கடித்தால் நாய்களுக்குத் தண்டனையாம். இதுபோல முதல் முறை நடந்தால் அந்த நாய்கள் 10 நாட்களுக்கு விலங்கு மையத்தில் வைக்கப்படுமாம். அதேநேரம் மீண்டும் அந்த நாய் காரணமில்லாமல் மனிதர்களைக் கடித்தால் வாழ்நாள் முழுக்க அந்த நாய் அங்கேயே அடைக்கப்படும் என்றும் உபி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது கிட்டத்தட்ட நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்குச் சமம். அப்படிக் காப்பகத்தில் அடைக்கப்படும் நாய்கள் தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறதாம். யாராவது ஒருவர், அந்த நாயைத் தத்தெடுத்தால் மட்டுமே அது காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்படும். மீண்டும் நாயைத் தெருக்களில் விட மாட்டோம் எனச் சொல்லி உறுதிமொழிப் பத்திரம் கொடுத்தால் மட்டுமே நாயை ரிலீஸ் செய்வார்களாம்.