சண்டிகர், செப். 18- சண்டிகரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, உலகின் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி மூலம் மகளிர் ஒருநாள் போட்டி வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற இமாலய சாதனையை செய்துள்ளது இந்திய மகளிர் அணி. சுமார் 18 வருடங்கள் கழித்து, இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தி இருக்கிறது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 77 பந்துகளில் அடித்த அதிவேக சதம், இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தது. இந்தியாவின் பேட்டிங்: இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, ஸ்மிருதி மந்தனா ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவரது அதிரடியால், இந்திய அணி 292 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு மகளிர் அணி எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். கடைசி நேரத்தில் தீப்தி ஷர்மாவின் அதிரடி, இந்தியாவின் ஸ்கோர் உயர உதவியது. சரிந்த ஆஸ்திரேலியா: சவாலான இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல், ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. சாதனைகளின் பட்டியல்: ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தோல்வி: 102 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த இந்தத் தோல்வி, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே, ரன்கள் வித்தியாசத்தில் இதுவே அவர்களது மிகப்பெரிய தோல்வியாகும். இதற்கு முன்னர், 1973 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 92 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே அவர்களது மோசமான சாதனையாக இருந்தது. 18 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் வெற்றி: இந்திய மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 12 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் வெற்றி-தோல்வி கணக்கு 1-11 ஆக இருந்தது. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 18 வருடங்கள் கழித்து, இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. மேலும், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வென்றுள்ளது.


















