புதுடெல்லி: செப். 18- வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக இம்முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப தேர்தல் நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வாக்குச் சீட்டில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஏம்) பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் வாக்குப்பதிவு நேரம், வாக்கு எண்ணும் நேரம் கணிசமாக குறைந்தது. எனினும், எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நடைமுறை மீது பல்வேறு குறைகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் ஒரே சின்னத்தில் வாக்குகள் பதிவாகும் வகையில் இவிஎம் இயந்திரத்தில் மாற்றம் செய்ய முடியும் என்று குறைகூறினர். இதை தேர்தல் ஆணையம் மறுத்தது.
அதன் பிறகு, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் விவிபாட் கருவி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டது.
அதில் வாக்களித்த சின்னம் அச்சிடப்பட்ட சீட்டை பார்க்க முடியும். ஆனால், அந்த சீட்டை வாக்காளர் எடுத்துச் செல்ல முடியாது.
இந்த சூழ்நிலையில், பிஹாரில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.















