கணவரை கொன்றவர்களை மன்னிக்கிறேன் – சார்லி கிர்க்கின் மனைவி

வாஷிங்டன்: செப். 22 –
அமெரிக்க அதிபர் டிரம்பின் நண்பரும், வலதுசாரி இளைஞர் அமைப்பாளருமான சார்லி கிர்க் செப்.10ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில், குற்றவாளியை மன்னிப்பதாக கண்ணீர் மல்க சார்லி கிர்க்கின் மனைவி எரிகா கிர்க் அறிவித்திருக்கிறார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் அனைவரும் அறிந்ததுதான். இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் சிலர் மட்டும் துப்பாக்கி கலாச்சாரம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர்தான் சார்லி கிர்க். இவர் தீவிர வலதுசாரியாளராகவும், டிரம்பின் நண்பராகவும் அறியப்பட்டவர்.
துப்பாக்கி கலாச்சாரத்திற்கு ஆதரவாக கடந்த செப்.10ம் தேதி உட்டா வேலி பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு ஆதரவாக பேசியவர், துப்பாக்கியால் கொல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கொலையாளியை சில மணி நேரங்களில் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சார்லி கிரிக் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக அரிசோனா மாகாணம் க்ளெண்டேலில் நேற்று நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிபர் டிரம்ப், துணை அதிபர் வேன்ஸ் உள்ளிட்டோரும், சார்லியின் மனைவி எரிகாவும் பங்கேற்றிருந்தார்.
கூட்டத்தில் பேசிய எரிகா, தன் கணவரை கொன்றவரை மன்னிப்பதாக கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். “என் கணவர், தன் உயிரைப் பறித்தவரைப் போன்ற இளைஞர்களைக் காப்பாற்ற விரும்பினார். அந்த இளைஞரை, நான் மன்னிக்கிறேன். கிறிஸ்து செய்தது போலவும், சார்லி செய்ததைப் போலவும் நான் மன்னிக்கிறேன்” என்று கூறினார்.
இதை சற்றும் எதிர்பாராத மக்கள் எழுந்து நின்று கை தட்டி இந்த அறிவிப்பை வரவேற்றனர்.
எரிகா மேலும் பேசுகையில், “கைது செய்யப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா? என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள். நான் நேர்மையாகச் சொல்கிறேன். இது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று எங்கள் வழக்கறிஞரிடம் கூறினேன். கைது செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை கொடுப்பதன் மூலம் என் கைகளில் ரத்தக்கறை படிய விரும்பவில்லை.