துபாய், செப். 22- துபாயில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் போட்டி களத்தில் மட்டுமல்ல, களத்திற்கு வெளியேயும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்துக் கொண்டிருந்த நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில், கிரிக்கெட் நிபுணர்கள் கூறிய கருத்து பெரும் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய வீரர்களைத் துப்பாக்கியால் சுட்டு ஆட்டத்தை முடித்துவிடலாம் என்று அவர்கள் கூறியது, கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நேற்றிரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களைப் பந்தாடி ரன் குவித்தது. ஒவ்வொரு ஓவரிலும் ஆட்டம் பாகிஸ்தானின் கையை விட்டு நழுவிச் சென்றதால், பாகிஸ்தான் வீரர்கள் பெரும் அழுத்தத்தில் இருந்தனர். இதே நேரத்தில், பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், தொகுப்பாளர் நிபுணர்களிடம், “சார், நம் வீரர்கள் எதிரணி வீரர்களைக் கொன்றால் நாம் ஜெயிக்க முடியுமா?” என்று ஒரு அதிர்ச்சிகரமான கேள்வியை எழுப்பினார். அதற்குப் பதிலளித்த நிபுணர்களில் ஒருவர் சிரித்துக்கொண்டே, “என் கருத்துப்படி, நமது வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இந்த ஆட்டத்தையே முடித்துவிட வேண்டும். ஏனென்றால் நாம் தோற்பது உறுதி” என்று பதிலளித்தார். இந்த விவாத நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பாசித் அலி மற்றும் கம்ரான் அக்மல் ஆகியோரும் நிபுணர்களாகப் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே களத்தில் தடுமாறி வரும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் வீரர்களே இது போன்ற வன்முறையான கருத்துக்களைத் தெரிவித்திருப்பது, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரும் தர்மசங்கடத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உரையாடலின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. போட்டியைப் பொறுத்தவரை, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, அபிஷேக் ஷர்மா (39 பந்துகளில் 74 ரன்கள்) மற்றும் சுப்மன் கில் (28 பந்துகளில் 47 ரன்கள்) ஜோடி 105 ரன்கள் சேர்த்து அபாரமான தொடக்கத்தை அளித்தது. இவர்களின் அதிரடியால் பாகிஸ்தான் பந்துவீச்சு முற்றிலும் நிலைகுலைந்தது.
Home விளையாட்டு “இந்திய கிரிக்கெட் வீரர்களைச் சுட்டுத் தள்ளினால் – டிவி விவாதத்தில் அதிர்ச்சி கருத்து


















