வாஷிங்டன், செப். 23- இந்தியா உடனான உறவுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததவை என ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நம் நாட்டின் மீது 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்தார். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாக தொடர்ந்து அவர் கூறி வருகிறார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்தாண்டு ஐ.நா., கூட்டத்தில் பங்கேற்பதை பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்துள்ளார். நம் நாட்டின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க ஐ.நா., பொது சபை கூட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவை, அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வர்த்தகம், வரி, விசா கட்டணம் உள்ளிட்டவை தொடர்பாகவும், சர்வதேச பிரச்னைகள் குறித்தும் இருவரும் பேசினர்.


















