புதுடெல்லி: செப்.23-
உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் மதுபானக் கடத்தல் தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி பிரவீன் சேத்ரி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், “ஜாதியை கொண்டாடுவது தேச விரோதமானது.
அரசியலமைப்பை மதிப்பது தேசபக்தியின் மிக உயர்ந்த வெளிப்பாடு” என்று கூறியிருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் திவாகர் தள்ளுபடி செய்தார். எனினும், அவர் வெளியிட்ட உத்தரவில், “சமூகத்தில் ஜாதியைப் பெருமைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.உ.பி.யின் அரசு ஆவணங்கள், வாகனங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து ஜாதி பெயர்கள், சின்னங்களை அகற்ற வேண்டும். வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டுமென்றால், ஜாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.அதன்படி, உ.பி. அரசு ஜாதி அடிப்படையிலான பொதுக் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தடை செய்துள்ளது. இதுகுறித்து உ.பி. தலைமை செயலர் தீபக் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் ஜாதியை கொண்டாடுவது அல்லது வெறுப்பை பரப்பும் உள்ளடக்கத்துக்கு எதிராக ஐடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

















