வாஷிங்டன், செப். 24- வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்காக வழங்கப்படும் எச் 1 பி விசா (H 1B) விசாவுக்கான கட்டணத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ.88 லட்சமாக உயர்த்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூகுள் நிறுவன ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புலம்பெயர்ந்து அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களின் பக்கம் கூகுள் நிற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இது கூகுள் நிறுவனம் மட்டுமின்றி டிரம்புக்கு வரும்காலத்தில் பிரஷரை ஏற்படுத்தலாம். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்றும் வகையில் எச் 1 பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதன் காலஅவகாசம் 3 ஆண்டுகளாகும். அதன்பிறகு 3 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.1.75 லட்சமாக இருந்தது. ஆனால் இந்த கட்டணத்தை டொனால்ட் டிரம்ப் ரூ.88 லட்சமாக அதிகரித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களின் பணி அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் இந்த கட்டண உயர்வு என்பது தற்போது எச் 1பி விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது. புதிதாக எச் 1பி விசாவிற்கு விண்ணப்பம் செய்வோருக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி இந்தியா உள்பட பிற நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்ற விரும்பும் திறமைசாலிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரூ.88 லட்சம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அவர்களால் எச் 1பி விசாவை பெற்று அமெரிக்கா செல்ல முடியும். இது பெரும் தொகை என்பதால் அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்ற கனவில் இருப்போருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியர்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள உள்ளனர்.


















