புதுடெல்லி: செப்.25
ஜி .எஸ்.டி. வரி சீர்திருத்தம் செய்திருப்பதால், சந்தையில் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. அதனால், விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுநாள் வரை வாங்க திட்டமிட்டிருந்த பொருட்களை, பொதுமக்கள் வாங்கத் துவங்கி விட்டனர். ‘என்கொயரி’யில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்கு நேரில் வந்து, தேவையானதை வாங்கிச் செல்வதால், வர்த்தகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கார் விற்பனை அதிகரிக்கும்!
ஜி.எஸ்.டி., குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து, மக்களிடம் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதற்காகவே காத்திருந்ததுபோல், சில நாட்களாக எங்களை தொடர்பு கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.புக்கிங்கும் நடந்து வருகிறது. ஹூண்டாய் பேசிக் மாடல்களில், கிராண்ட் ஐ10 நியாஷ் மாடல், ரூ.5,98,300ல் இருந்து, 5,47,278 என, ரூ.51,022 குறைந்துள்ளது.
எக்ஸ்டர் – ரூ.6,20,990ல் இருந்து, 5,68,033 என, 52,957 ரூபாய் குறைந்துள்ளது.
ஐ 20 – ரூ.7,50,900ல் இருந்து, 6,86,865 என, 64,035 ரூபாய் குறைந்துள்ளது. உயர் ரக மாடலான, டுசான் ரூ.29,26,800 ல் இருந்து, 27,31,661 என, 1,95,139 ரூபாய் குறைந்துள்ளது.இத்துடன், உயர் ரக மாடல்களில், ரூ.50,000 முதல் 2,50,000 வரை விலை குறைந்துள்ளது. இத்துடன், ஷோரூமில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் விழாக்கால தள்ளுபடி என மேலும் இதன் விலை குறையும் என்பதால், கார்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஜி.எஸ்.டி.,யில் 10 சதவீதம் குறைக்கப்பட்டது, யாருமே எதிர்பார்க்காத ஒன்று. இது மிகப்பெரிய தள்ளுபடி. வழக்கமாக டிச., மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சலுகை வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் அதுவரை காத்திருந்து, வாகனங்களை வாங்குவர். ஆனால், தற்போது பண்டிகை காலத்தை ஒட்டி நாங்கள் வழங்கும் சலுகைகளுடன் சேர்த்து, இந்த வரி சீரமைப்பும் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மூன்று நாட்களாக அவர்களின் வருகை அதிகளவில் உள்ளது. வரி சீரமைப்பால், எஸ்-ப்ரஸ்சோ மாடல், ரூ.4,26,500ல் இருந்து, ரூ.3,49,900 என, 76,600 ரூபாய் குறைந்துள்ளது.
ஆல்டோ கே 10 – ரூ.4,23,000ல் இருந்து, ரூ.3,69,900 என, 53,100 ரூபாய் குறைந்துள்ளது. இதேபோல், செலிரியோ, வேகன் ஆர் மாடல்களுக்கு ரூ.75,500ம், ஸ்விப்ட் ரூ.78,000மும் குறைந்துள்ளது. இதனால், விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.















