திருப்பதி பிரம்மோற்சவம் – பட்டு வஸ்திரம் காணிக்கை வழங்கினார் சந்திரபாபு நாயுடு

திருமலை: செப். 25-
திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லின் வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்​றத்​துடன் வெகு சிறப்​பாக தொடங்​கப்​பட்​டுள்​ளது. கொடியேற்​றத்தை முன்​னிட்​டு, ஏழு​மலை​யான் கோயி​லில், நேற்று மாலை உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் மலை​யப்​பரை ஊர்​வல​மாக தங்க கொடிமரத்​தின் அருகே கொண்டு வந்​தனர்.
அங்கு வேத​பண்​டிதர்​கள் வேதங்​கள் ஓத, மங்கள வாத்​தி​யங்​கள் முழங்க, கருடன் சின்​னம் பொறித்த கொடி, தங்க கொடி மரத்​தில் ஏற்றப்பட்டது.
இது முப்​பது முக்​கோடி தேவாதி தேவர்​களை​யும் பிரம்​மோற்​சவத்​துக்கு அழைப்பு விடுப்​ப​தற்​கான ஒரு நிய​தி​யாகும் என கூறப்​படு​கிறது. இதனை தொடர்ந்​து, வரும் அக்​டோபர் மாதம் 2-ம் தேதி வரை தின​மும் காலை​யில் 8 மணி முதல் 10 மணி வரை​யிலும், இரவில் 7 மணி முதல் 9 மணி வரை​யிலும் உற்​சவ​ரான மலை​யப்​பர் வித​வித​மான வாக​னங்​களில் 4 மாட வீதி​களில் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலிக்க உள்​ளார்.இதில் ஒரு நாள் தங்க தேரோட்​டத்​தி​லும், ஒரு நாள் மர தேரிலும் பவனி வந்து காட்சி அளிக்க உள்​ளார். பிரம்​மோற்​சவம் நடை​பெறும் அனைத்து நாட்​களி​லும் தின​மும் மதி​யம் உற்சவ மூர்த்​தி​களுக்கு திரு​மஞ்சன நிகழ்ச்சி நடை​பெறு​வது ஐதீகம். இதில் இரண்டு முறை சிறப்பு திரு​மஞ்சன நிகழ்ச்​சிகள் நடத்​தி, வித​வித​மான அலங்​காரங்​களும் செய்​யப்​படும்.பிரம்​மோற்சவ விழா​வினை முன்​னிட்டு திருப்​பதி மற்​றும் திரு​மலை விழாக்​கோலம் பூண்​டுள்​ளது.
விழா தொடங்​கியதையடுத்​து, ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்​வரியுடன் வந்து ஆந்​திர அரசு தரப்​பில் பட்டு வஸ்​திரங்​களை காணிக்​கை​யாக வழங்​கி​னார். முன்​ன​தாக நேற்று மாலை அவர் விமானம் மூலம் ரேணி​குண்டா விமான நிலை​யம் வந்​தடைந்​தார். அவரை அமைச்​சர்​கள், எம்​பி, எம்​.எல்​.ஏக்​கள், அரசு, தேவஸ்​தான அதி​காரி​கள் உற்​சக​மாக வரவேற்​றனர்.அதன் பின்​னர், முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தனது குடும்​பத்​தா​ருடன் காரில் திரு​மலைக்கு சென்​றார். அங்கு தேவஸ்​தான அதி​காரி​கள் அவரை வரவேற்​றனர். அதன் பின்​னர், பேடி ஆஞ்​சநேயர் கோயி​லில் இருந்து பட்டு வஸ்​திரத்தை தலை​யில் சுமந்து சென்று கோயி​லில் தேவஸ்​தான அர்ச்​சகர்​களிடம் அவற்றை சமர்ப்​பித்​தார்.பிரம்​மோற்சவ விழா​வில் முதல் நாளான நேற்று இரவு, ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் மலை​யப்​பர் ஆதி சேஷ​னாக கருதப்​படும் பெரிய சேஷ வாக​னத்​தில் எழுந்​தருளி​னார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடை​பெற்ற இந்த வாகன சேவை​யில் குடியரசு துணை தலை​வர் சிபி ராதாகிருஷ்ணன் மற்​றும் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்​டனர்.