வாஷிங்டன், செப். 26- இந்தியா அமெரிக்கா உறவில் கடந்த சில காலமாகவே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் மறுபுறம் அமெரிக்கா பாகிஸ்தான் மெல்ல நெருக்கமாகி வருகிறது. இதற்கிடையே வெள்ளை மாளிகைக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அங்கு வைத்து அதிபர் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு நடந்த சில மணி நேரத்தில் புதிய வரி குறித்த அறிவிப்பும் வெளியாகி இருப்பது சந்தேகத்தைக் கிளப்புவதாக இருக்கிறது. கடந்த சில காலமாகவே உலக அரசியல் மெல்ல மாறி வருகிறது. இத்தனை காலமாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு இருந்த சூழலில், சில மாதங்களாக இரு நாட்டு உறவில் மோதல் போக்கு நிலவுகிறது. மறுபுறம் அமெரிக்காவும் பாகிஸ்தானும் நெருக்கம் காட்டி வருகிறது. இரு தரப்பு தலைவர்களும் தொடர்ச்சியாகச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். ஷெபாஸ் ஷெரீப் இதற்கிடையே மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஓவல் அலுவலகத்தில் வைத்து டிரம்ப்பை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் உடனிருந்தார். பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் இந்தச் சந்திப்பின்போது ஷெரீப்புடன் வந்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே ஷெரீப்பை தான் அழைத்து டிரம்ப் விருந்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பிற்கு முன்பு, பாகிஸ்தான் தலைவர்களை “சிறந்த தலைவர்கள்” என்று குறிப்பிட்ட டிரம்ப், இந்தச் சந்திப்பு அமெரிக்கா- பாகிஸ்தான் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் கூறினார்.


















