பெங்களூரு: செப். 27-
பெங்களூர் மாநகரை பொறுத்தவரை மிகவும் கடுமையான நெரிசல் உள்ள நகரம், குண்டும் குழியுமான சாலைகள் உள்ள நகரம் என்கிற அதிருப்தி ஐடி பணியாளர்களுக்கு அதிகமாக இருக்கிறது. கடுமையான நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கர்நாடகா மாநில அரசு ஒரு துணிச்சலான யோசனையைக் பரிசீலித்து வருகிறது. அந்த முடிவு ஐடி ஊழியர்களுக்கு நிச்சயம் ஷாக் தரும்.. அது என்னவென்றால், அதிக நெரிசல் மிகுந்த சாலைகளில் தனி ஆளாகச் செல்லும் கார்களுக்கு நெரிசல் வரி விதிப்பது தான்.
என்னங்க சொல்றீங்க.. காரில் தனியாக செல்வோருக்கு பெங்களூரில் அபராதமா என்றால்… ஆம்.. அப்படியான அபராதம் விதிப்பதற்கு கர்நாடகா அரசு தயாராகி வருகிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. சென்னையை வைத்தே இதற்கான காரணத்தை கூறலாம்.. சென்னையில் நீங்கள் அண்ணா சாலையிலோ, ஜிஎஸ்டி ரோட்டிலோ அல்லது ஓஎம்ஆர் சாலையிலோ அல்லது ஆவடியில் இருந்து கோயம்பேட்டிற்கு செல்லும் சாலையிலோ அல்லது பல்வேறு சென்னையின் சாலைகளில் சென்றால் கார்களை அதிகமாக பார்க்க முடியும்.இவ்வளவு நெரிசல் மிகுந்த சாலையாக பெங்களூர் மாநகரம் மாறுவதற்கு பலரும் கார்களில் செல்வது தான். தனி ஒருவருக்கு ஒரு கார் என்று பல ஆயிரம் பேர் காரில் செல்வார்கள். அவர்கள் தனிகாரில் செல்லாமல் பொதுபோக்குவரத்தை நாடினால் அல்லது அலுவலக வாகனங்களில் சென்றால் நெரிசல் பெருமளவு குறையும்.. ஆனால் அதற்கு பலரும் தயாராக இல்லை.. இதனால் நெரிசலை எப்படி குறைக்கலாம் என்று யோசித்த அரசு, தனியாக காரில் செல்பவர்களுக்கு வரிபோடலாம் என்று யோசித்து வருகிறது. நெரிசல் வரி விதிக்க அரசு ஆலோசனை பெங்களூர் மாநகரின் நீண்டகால உள்கட்டமைப்புப் பிரச்சினைகளைத் தணிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்க, கர்நாடகா மாநில அரசு,கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள் மற்றும் நகர பிளானிங் அதிகாரிகளை அழைத்து விவாதித்தது. இந்தக் கூட்டத்திற்கு கர்நாடக தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ் தலைமை தாங்கினார். பயோகான் (Biocon) தலைவர் கிரண் மஜும்தார்-ஷா, பெங்களூர் நகர திட்டமிடுபவரும், யூலு (Yulu) நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஆர்.கே. மிஸ்ரா, மற்றும் நகர வடிவமைப்பாளரும், கட்டிடக் கலைஞருமான நரேஷ் நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல யோசனைகளில் ஒன்று தான் தனியாக கார்களில் செல்வர்களுக்கு நெரிசல் வரி விதிப்பது.90 நாட்கள் பெங்களூர் நகரின் சாலைகள் அமைக்கும் பணியின் தரத்தை கடுமையாகச் சோதிப்பது மற்றும் நகரில் நடந்து வரும் அனைத்து உள்கட்டமைப்புத் திட்டங்களையும் நெருக்கமாகக் கண்காணிப்பது போன்ற விஷயமும் யோசனையாக தெரிவிக்கப்பட்டது.யூலு நிறுவனத்தின் இணை நிறுவனர் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் பெங்களூர் நகரில் நெரிசல் கட்டணம் விதிப்பது குறித்து விவாதித்தோம். வெளி வட்டச் சாலைக்குள் (ORR) நுழைந்து, காரில் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்தால், நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இந்த வரி தனி ஆளாகப் பயணிக்கும் கார்களுக்கு மட்டுமே பொருந்தும். இது கார்களின் எண்ணிக்கையை குறைத்து, நகரத்தின் நெரிசலைக் குறைக்க உதவும். கார்களின் பயன்பாட்டைத் தடுக்க, இந்த வரியை ORR மற்றும் பிற அதிக நெரிசல் மிகுந்த முக்கியச் சாலைகளில் பயன்படுத்தலாம் என்றார்,

















