ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..?

புதுடெல்லி, செப். 29- ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதிக் கொள்கை குழுவின் (MPC) 3 நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகள் மீது 50% வரிகளை விதித்துள்ள சூழ்நிலையில்,
இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவு அக்டோபர் 1ஆம் தேதியான புதன்கிழமை அன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், எஸ்.பி.ஐ. ஆய்வு அறிக்கை ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதே ரிசர்வ் வங்கிக்கு உள்ள சிறந்த சாத்தியமான வழி என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால், பிற பொருளாதார நிபுணர்கள் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, ஆர்.பி.ஐ. வட்டி விகிதத்தில் “தற்போதைய நிலையையே” நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர். சில்லறைப் பணவீக்கத்தின் அடிப்படையில் (CPI) கடந்த பிப்ரவரி முதல் 3 தவணைகளில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 100 அடிப்படைப் புள்ளிகள் குறைத்தது. ஆனாலும், ஆகஸ்ட் மாத கொள்கை முடிவில், அமெரிக்க வரிகள் மற்றும் புவிசார் அரசியல் விளைவுகளை மதிப்பிடுவதற்காக நிலையை மாற்றாமல் காத்திருப்பு அணுகுமுறையைப் பின்பற்றியது. ரிசர்வ் வங்கி ஆய்வின்படி, சில்லறை பணவீக்கம் அடுத்த நிதியாண்டிலும் கட்டுக்குள் இருக்கும் என்பதால், ஆர்.பி.ஐ. வட்டி விகிதத்தை குறைப்பதற்கான நியாயம் மற்றும் அடிப்படை உள்ளது. கிரிசில் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் தர்மகீர்த்தி ஜோஷியும் இந்த மாதமே விகித குறைப்பு வரலாம் என்று எதிர்பார்க்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜி.எஸ்.டி. விகிதங்களை சீரமைத்தது பணவீக்கத்தை மேலும் குறைக்க உதவும். மேலும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, இந்த ஆண்டு மேலும் 50 அடிப்படைப் புள்ளிகள் குறைக்க வாய்ப்புள்ளதால், ஆர்.பி.ஐ.க்கு சில சலுகைகள் கிடைக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.