பாகிஸ்தானை பாராட்டி தள்ளிய அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: செப்.30- அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகள் கடந்த சில காலமாகவே நெருக்கம் காட்டி வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிர் ஆகியோரை அதிபர் டிரம்ப் மீண்டும் பாராட்டித் தள்ளி இருக்கிறார். காசா மோதல் தொடர்பான விவகாரத்தில் பாகிஸ்தானை டிரம்ப் பாராட்டி இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே கடந்த பல ஆண்டுகளாகச் சிறப்பான உறவு இருந்தது இல்லை. ஆனால், டிரம்ப் அதிபரான பிறகு அந்த நிலை மாற ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவும் பாகிஸ்தானும் நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் கூட வெள்ளை மாளிகைக்கு நேரில் சென்று டிரம்பை சந்தித்துப் பேசியிருந்தார்.
100% ஆதரவாம் இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிர் ஆகியோரை அதிபர் டிரம்ப் மீண்டும் பாராட்டித் தள்ளி இருக்கிறார். காசா போரை முடிவுக்கு கொண்டு வரத் தான் வெளியிட்ட 20 அம்சத் திட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிர் ஆகியோர் நூறு சதவீதம் ஆதரவளித்ததாக டிரம்ப் தெரிவித்தார். மேலும், பேச்சுவார்த்தை தொடங்கியது முதலே பாகிஸ்தான் தலைமை இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மீண்டும் சீராகத் தொடங்கியுள்ள நிலையில், டிரம்ப்பின் இந்தக் கருத்துகள் வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்கி இருப்பதையே இது காட்டுகிறது.
பாகிஸ்தானுக்கு பாராட்டு முன்னதாக நேற்றைய தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் டிரம்ப் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து இருவரும் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாகிஸ்தானின் பிரதமரும், ஃபீல்ட் மார்ஷலும் ஆரம்பத்திலிருந்தே எங்களுடன் இருந்தனர். அவர்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக நம்புவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்கள் இதை 100% ஆதரிக்கிறார்கள்” என்றார்.நன்றி சொன்ன டிரம்ப் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரவும், புதிய காசா மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கவும் 20 அம்சத் திட்டத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தான் டிரம்ப் இந்தக் கருத்துகளைக் கூறினார். மேலும், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், துருக்கி மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் டிரம்ப் நன்றி தெரிவித்தார். கைதிகள் பரிமாற்றம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேல் படிப்படியாக வெளியேறி அங்கு மீண்டும் அமைதியைக் கொண்டு வருவதே இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.