வாஷிங்டன், செப். 30- காசா போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் போர் நிறுத்த யோசனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது..
இந்தப் போரால் காசா பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில், காசா போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காசா போர் நிறுத்தத்துக்கான விரிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டார் என நிருபர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப் அறிவித்தார். அப்போது போர் நிறுத்தம் மற்றும் அமைதி தொடர்பான 20 அம்சத் திட்டம் குறித்து, அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: காசாவுக்கான தனது 20 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக்கொண்டதற்காக அவருக்கு நன்றி.
ஹமாஸ் இந்த அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தால், அந்த அமைப்பின் அச்சுறுத்தலை அழித்து வேலையை முடிக்க இஸ்ரேலுக்கு எனது முழு ஆதரவும் இருக்கும். காசா போரில் அமைதியைப் ஏற்படுத்துவதில் அமெரிக்கா மிக மிக அருகில் வந்துவிட்டது. அனைவரும் ஒரு சிறப்பான ஒப்பந்தத்திற்காக இணைந்திருக்கிறார்கள். இஸ்ரேல் காசாவை இணைக்காது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு யாரும் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள். ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இறந்த பிணைக்கைதிகளின் உடல்கள் தாமதமின்றி திருப்பி அனுப்பப்படும். போர் உடனடியாக முடிவுக்கு வரும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார். டிரம்பின் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்கள்: * ஹமாஸ் ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவித்தால், அடுத்தக்கட்டமாக படிப்படியாக இஸ்ரேல் படையினர் காசாவில் இருந்து வெளியேறுவார்கள்.


















