இருமல் எமன் சிரப் – குழந்தைகள் பலி 20 ஆக அதிகரிப்பு

டெல்லி:அக்டோபர் 8
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குடித்ததால் மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே 14 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 20ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்த 20 குழந்தைகளில், 17 பேர் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பெதுலை பகுதியை சேர்ந்த இருவர், பாண்டூர்ணாவை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து துணை முதலமைச்சர் ராஜேந்திர சுக்லா கூறுகையில், “சிகிச்சை பெற்று வந்த சில குழந்தைகள் குணமடைந்த போதிலும், செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு குழந்தைகளும், திங்கள்கிழமை இரவு ஒரு குழந்தையும் உயிரிழந்தன. முன்னதாக 17 குழந்தைகள் இறந்திருந்தன. தற்போது 5 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகின்றன” என கூறியிருக்கிறார். ஐந்து குழந்தைகள் நாக்பூரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், இருவர் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் மற்றும் சளி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ‘கோல்ட்ரிஃப்’ சிரப்பைக் குடித்த பிறகு வாந்தி மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டனர். முதல் உயிரிழப்பு செப்டம்பர் 2 அன்று பதிவானது. இந்த சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ‘ஸ்ரீசன் ஃபார்மசூட்டிகல்ஸ்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. உயிரிழப்பு சம்பவத்தையடுத்து, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி என எட்டு மாநிலங்களில் இந்த மருந்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 2 அன்று, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர், கோல்ட்ரிஃப் மாதிரிகள் தரமற்றவை என்பதைக் கண்டறிந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் மாதிரியில் 48.6% டைஎத்திலீன் கிளைக்கால் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதுபோன்ற இருமல் மருந்துகளில், டைஎத்திலீன் கிளைக்காலின் 0.1% மட்டுமே கலந்திருக்க வேண்டும்.