
புதுடெல்லி: அக்டோபர் 10
உத்தரப்பிரதேசம் அலிகர் கொலை வழக்கில் தேடப்படுபவர், இந்துமகா சபாவின் பொதுச்செயலாளர் துறவி பூஜா சகுன் பாண்டே. இவர், முஸ்லிம் பெண்களைப் போல் பர்தா அணிந்து தலைமறைவானதாத் தகவல் வெளியாகி உள்ளது.
உபியின் அலிகர் நகரில் 2017 முதல் ஆசிரமம் நடத்தி வந்தவர் துறவி பூஜா சகுன் பாண்டே(50) எனும் அன்னபூர்ணா பாரதி. நிரஞ்சன் அகாடாவின் துறவறத்தில் மகா மண்டலேஷ்வர் பட்டம் பெற்றவர்.
பெண் துறவியான இவர், இந்து மகா சபாவின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவரது ஆசிரம நிர்வாகியும், நெருங்கிய சகாவுமான அபிஷேக் குப்தா, இருசக்கர விற்பனை நிலையம் நடத்தி வந்தார். இருவருக்கும் இடையிலான நெருக்கம் விரோதமாகி மோதலானது. இச்சூழலில் அபிஷேக் கடந்த செப்டம்பர் 26 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இக்கொலையைச் செய்தது அலிகரின் பிரபல கிரிமினல்களான பைஸல் மற்றும் ஆசீப் எனத் தெரிந்து கைது செய்யப்பட்டனர். இவர்களது விசாரணையில் ரூ.3 லட்சம் பேசி அபிஷேக்கை கொல்ல உத்தரவிட்டது துறவி பூஜா மற்றும் அவரது நண்பர் அசோக் பாண்டே எனத் தெரிந்தது.
இதனால், அசோக் பாண்டேவும் கைது செய்யப்பட்ட நிலையில், துறவி பூஜா தலைமறைவாகி உள்ளார். கடந்த 15 நாட்களாகத் தேடப்படும் துறவி பூஜாவின் துப்பு அளிப்போருக்கு ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொலை நடந்த அன்று அவர் முஸ்லிம் பெண்ணைப் போல் பர்தா அணிந்து காஜியாபாத்திற்கு வாடகைக் காரில் தப்பியது தெரிந்துள்ளது. அங்கு தாஸ்னா தேவி கோயில் மடத்தின் தலைவர் எத்தி நரசிம்மாணந்திடம் உதவி கேட்டு சென்றுள்ளார்.
இந்த தகவலை துறவி பூஜாவை அழைத்துச் சென்ற ஓட்டுநர் அலிகர் போலீஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். அலிகரில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு சமூக சேவகரால் துறவி பூஜாவிற்கானப் பர்தா மற்றும் டாக்ஸி ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது.
இதையடுத்து அலிகர் போலீசார் காஜியாபாத்தின் தாஸ்னா தேவி கோயில் மடத்தில் சென்று விசாரித்தனர். அவர்களிடம் மடத் தலைவரான துறவி எட்டி நரசிம்மானந்த் தன்னிடம் உதவி கேட்டு பூஜா வந்ததை ஒப்புக்கொண்டார்.
எனினும், அவர் ஒரு கொலைக் குற்றவாளி என்பதால் பூஜாவிற்கு அடைக்கலம் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், இதனால் அவர் ஹரித்துவார் கிளம்பியதாகவும் கூறி உள்ளார். போலீசார் தற்போது ஹரித்துவாரில் துறவி பூஜாவைத் தேடி வருகின்றனர்.
இதற்காக, காஜியாபாத்தில் இருந்து ஹரித்துவார் செல்லும் வழியில் உள்ள சிசிடிவி கேமராக்களும் ஸ்கேன் செய்யப்படுகின்றன. பூஜா சகுன் தப்பிச் சென்றதிலிருந்து குறிப்பிடத்தக்க தடயங்கள் எதுவும் இதுவரைக் கிடைக்கவில்லை.
இது குறித்து அலிகர் மாவட்ட எஸ் எஸ் பியான மிருகங்க் சேகர் கூறுகையில், ’துறவி பூஜா மீதானத் துப்பிற்கு வெகுமதியை அதிகரிக்க யோசனை செய்து வருகிறோம். இவர் தப்பிக்க உதவிய இளைஞர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.’ எனத் தெரிவித்தார்.















