நவி மும்பையில் பிரம்மாண்ட விமான நிலையம்: மோடி திறந்து வைத்தார்

மும்பை : அக்டோபர் 10
பிரதமர் நரேந்திர மோடி, நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை (NMIA) இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய விமான நிலையம், பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதுடன், உள்ளூர் உற்பத்தியாளர்கள், தொழிற்சாலைகள், விவசாயிகளை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் இணைத்து, அவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் செயல்படும். மும்பை நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரண்டாவது சர்வதேச விமான நிலையம் இது என்று பிரதமர் குறிப்பிட்டார். இப்பகுதி ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக மாறுவதற்கு நவி மும்பை சர்வதேச விமான நிலையம் முக்கியப் பங்காற்றும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இது வளர்ந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டும் ஒரு திட்டம் என்று மோடி விவரித்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் மண்ணில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், தாமரை மலரின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட சர்வதேச விநியோகச் சங்கிலியுடன் நேரடியாக இணைக்கும். பிரதமர் மோடி, தனது உரையாற்றுவதற்கு முன், விமான நிலையத்தின் உலகத் தரமான வசதிகளைப் பார்வையிட்டார். மகாராஷ்டிரா ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ்வ்ரத், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஸ்ரீ தேவேந்திர பட்னாவிஸ், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்ரீ ராம் மோகன் நாயுடு கின்ஜாரபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.