நிறுவனத்தின் வருவாய் மட்டுமே இத்தனை கோடியா..?

புதுடெல்லி: அக்டோபர்14-
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக ஹெச்.சி.எல் டெக் (HCLTech) விளங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது, ஊழியர்களுக்கு காலாண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த மாறுபடும் ஊதியக் கொள்கையை மாற்றி, இனி நிலையான சம்பளத்துடன் இணைக்க முடிவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, ஊழியர்களின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு இம்மாதம் முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. காலாண்டு ஊக்கத்தொகை இனி நிரந்தரம் : செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகள் குறித்த மாநாட்டில் பேசிய ஹெச்.சி.எல் டெக்கின் தலைமை மக்கள் அதிகாரி ராம் சுந்தரராஜன், “நாங்கள் வலுவான காலாண்டை கொண்டிருந்ததால், அக்டோபர் முதல் அமலுக்கு வரும் வகையில் சம்பள உயர்வுகளை வழங்க முடிவு செய்துள்ளோம். கடந்த ஆண்டு நாங்கள் பின்பற்றிய அதே நடைமுறையை தான் இப்போதும் பின்பற்றி சம்பள உயர்வை செயல்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார். மேலும், “இத்துடன் கூடுதலாக, வேரியபிள் பே ஊதியத்தை நிலையான ஊதியமாக மாற்றும் முடிவையும் எடுத்துள்ளோம். இந்தத் தொகையை அனைத்து ஊழியர்களுக்கும் நிரந்தரச் சம்பளத்துடன் இணைக்க இருக்கிறோம். எங்களின் இந்த முடிவுகளுக்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த இரண்டு முக்கியமான முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம்” என்றும் அவர் கூறினார். கடந்த வருடம் ஹெச்.சி.எல் டெக் நிறுவனம் சராசரியாக 7% சம்பள உயர்வை ஊழியர்களுக்கு வழங்கியது. அதில், சிறந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு 12 முதல் 14 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.