வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

டெல்லி, அக். 14- இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதுவே இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகவும் அமைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 5-ஆம் நாள் வரை போட்டியை எடுத்துச் சென்றது. இந்தப் போட்டியின் தொடக்கத்தில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் (175), சாய் சுதர்சன் (87), சுப்மன் கில் (129) ஆகியோர் அபாரமாகச் சதம் மற்றும் அரைசதம் அடித்தனர்.வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 248 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 270 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில், 200 ரன்களுக்கு மேல் முன்னிலை இருந்தால் ஃபாலோ-ஆன் கொடுக்கலாம் என்ற விதியின் படி, இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு ஃபாலோ-ஆன் கொடுத்தது.
ஆனால், இந்த முடிவு எதிர்பார்த்ததைப் போலச் செல்லவில்லை. ஃபாலோ-ஆனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 390 ரன்கள் சேர்த்தது. துவக்க வீரர் ஜான் கேம்ப்பெல் (115) மற்றும் ஷாய் ஹோப் (103) ஆகியோர் வரலாற்றுச் சதங்களைப் பதிவு செய்தனர். ஜஸ்டின் கிரீஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 50 ரன்கள் சேர்த்தார்.