
புதுடில்லி; அக். 18-
காற்றை மாசுபடுத்தும் வகையில் இயக்கப்படும் கனரக வாகனங்கள் டில்லிக்குள் நுழைய நவம்பர் 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
காற்றின் தரத்தையும், சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும் வகையிலும் தலைநகர் புதுடில்லியில் வாகனங்கள் இயக்கங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் டீசலில் இயங்கும் 10 ஆண்டுகள் பழமையான வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் ஆகியவற்றுக்கு எரிபொருள் விற்பனை செய்ய ஜூலை 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தன. இந் நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக நவ.1ம் தேதி முதல் டில்லிக்குள் மாசு ஏற்படுத்தும் வணிக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை காற்று தர மேலாண்மை ஆணையம் வெளியிட்டு உள்ளது. ஆணையத்தின் 25வது கூட்டத்தில் இதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளது.
உத்தரவை மீறி வாகனங்கள் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பிக்கும் பணியில் அலட்சியமாக அதிகாரிகள் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இந்த கூட்டத்தில் அனுமதி தரப்பட்டு உள்ளது.















