கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்பு

புதுடெல்லி: அக். 25- ரஷ்யாவின் இரண்டு முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி குறைக்கப்பட்டதை ஈடுசெய்ய, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. உக்ரைனுடனான போரின் காரணமாக ரஷ்யாவின் மிக பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான ரோஸ்நெப்ட், லுகோயில் ஆகிவற்றுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதன் மூலம் எந்த ஒரு அமெரிக்க மற்றும் வெளிநாட்டு நிறுவனமும் தடை செய்யப்பட்ட ரஷ்ய நிறுவனங்களுடன் வணிக ஒப்பந்தங்களை செய்ய முடியாது.இதை மீறினால், அபராதம் மற்றும் தண்டனையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.ரோஸ் நெப்ட் மற்றும் லுகோயில் சம்பந்தப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளும் நவம்பர் 21 ம் தேதிக்குள் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யா தற்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது.
இந்த ஆண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 17 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 12 லட்சம் பீப்பாய்கள் ரோஸ் நெப்ட் மற்றும் லுகோயிலிலிருந்து நேரடியாக வந்தது. இந்த அளவுகளில் பெரும்பாலானவை தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி ஆகியவற்றால் வாங்கப்பட்டன. இந்த தடை​வி​திப்​பால் இந்த இரு நிறு​வனங்​களின் கச்சா எண்​ணெய் இறக்​குமதி கடுமை​யாக பாதிக்​கப்​படும் நிலை உரு​வாகி​யுள்​ளது.அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்கள் இந்த நிறுவனங்களிடம் இருந்து குறைந்த அளவிலே எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.
இது பற்றி கெப்ளரின் முன்னணி ஆராய்ச்சி ஆய்வாளர் (சுத்திகரிப்பு மற்றும் மாடலிங்) சுமித் ரிட்டோலியா கூறுகையில்,‘‘ நவம்பர் 21ம் தேதி வரை ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 16 லட்சம்முதல் 18 லட்சம் பீப்பாய்கள் என்ற வரம்பில் இருக்கும்.அதன் பிறகு ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயிலில் இருந்து நேரடி இறக்குமதிகள் குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளின் அபாயத்தைத் தவிர்க்க முயல்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் காரணமாக பிற இடங்களிலிருந்து விநியோகம் குறைந்து விட்டதால், தற்போது ரஷ்ய எண்ணெயை மட்டுமே நம்பியுள்ள நயாராவுக்கு மிகக் குறைவான வழிகள் மட்டுமே உள்ளன.