டிரம்ப் வேஸ்ட் என விமர்சித்த மம்தானி! நியூயார்க் மேயர் தேர்தலில் வெல்வாரா?

நியூயார்க், அக். 25- நியூயார்க் நகர மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோஹ்ரான் மம்தானி களமிறங்கியுள்ளார். இவர் அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இந்த தேர்தலின் வாக்குப்பதிவு தற்போது தொடங்கியிருப்பதால், இவர் வெற்றிப்பெறுவரா? என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. நியூயார்க் நகர தேர்தல் தேதி நவம்பர் 4 தான். ஆனால் அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை இருக்கிறது. எனவே இன்று முதல் வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ளன. முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை என்றால் என்ன? இந்தியாவில் இருப்பதை போல தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அந்த நாளில் மட்டுமே வாக்களிக்க முடியும் என்கிற நடைமுறை அமெரிக்காவில் கிடையாது. வேலைக்கு செல்பவர்கள், விடுப்பு கிடைக்காதவர்கள், மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் இவர்களால் குறிப்பிட்ட தேதியில் வாக்களிக்க முடியாது. மட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட நாளில் வாக்களிக்க வேண்டும் எனில், கூட்ட நெரிசல் ஏற்படும். எனவே இதையெல்லாம் தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அந்நாட்டில் பின்பற்றப்படுகிறது. அதன்படி பொது தேர்தல் தேதிக்கு 9 நாட்களுக்கு முன்பு இருந்து மக்கள் வாக்களிக்க தொடங்கலாம். இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். தபால் வாக்குப்பதிவும், முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையும் வெவ்வேறானவை. அந்த வகையில் இன்று தேர்தல் தொடங்கியிருக்கிறது.