
புதுடெல்லி: அக்டோபர் 27 -மகாராஷ்டிர பெண் மருத்துவர், அந்த மாநில அரசு நிர்வாகத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
மகாராஷ்டிராவின் சாதரா மாவட்டம், பால்டன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் (28) கடந்த 7-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பாதானே காரணம், அவர் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பெண் மருத்துவர் தனது உள்ளங்கையில் குறிப்பு எழுதியிருந்தார்.
அதோடு 4 பக்க கடிதத்தையும் பெண் மருத்துவர் எழுதியுள்ளார். அதில், ‘‘ஒரு எம்பியின் 2 உதவியாளர்கள் சில நபர்களுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ்கள் வழங்க வற்புறுத்தினர்’’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிர பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அவர் மிகக் கடுமையாக மிரட்டப்பட்டு உள்ளார். அவரது தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஊழல் அரசு அதிகாரிகள், கிரிமினல்களின் சதியில் சிக்கி அவர் உயிர் இழந்துள்ளார்.
கிரிமினல்களிடம் இருந்து பொதுமக்களை காப்பது அரசின் கடமை. ஆனால் மகாராஷ்டிர அரசு நிர்வாகமே அப்பாவி பெண்ணின் உயிரை பறித்திருக்கிறது. பாஜகவை சேர்ந்த சிலர், பெண் மருத்துவரை மிரட்டி உள்ளனர். போலி உடற்தகுதி சான்றிதழ்களை வழங்கக் கோரி நிர்பந்தம் அளித்துள்ளனர்.மகாராஷ்டிர பெண் மருத்துவரை, அந்த மாநில அரசு நிர்வாகமே படுகொலை செய்திருக்கிறது. அரசு நிர்வாகம் கிரிமினல்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும். பெண் மருத்துவரின் மரணம், மகாராஷ்டிர பாஜக அரசின் நிர்வாக சீர்கேட்டை பிரதிபலிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.















