
கரூர்: அக். 27-
கல்லூரி நண்பரின் சகோதரி திருமண விழாவுக்கு சென்றப்போது கரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் படிக்கும் 8 மாணவர்கள் நண்பரின் சகோதரி திருமண விழாவில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து கரூருக்கு காரில் நேற்று வந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த பிரவீண் (19) காரை ஓட்டி வந்துள்ளார். கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் தென்னிலையை அடுத்த காட்டுமுன்னூர் பகுதியில் வந்துக் கொண்டிருந்தப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத்தடுப்பில் மோதி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த பிரவீண், நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்த மாதேஷ் (19) ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (19), பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் (19), கன்னியாகுமரியை சேர்ந்த ஹசன் (19), குளித்தலையை சேர்ந்த திவாகரன் (19) ஆகிய 4 பேர் காயமடைந்தனர். இருவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தென்னிலை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த பிரவீண் மற்றும் மாதேஷ் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.


















