
புவனேஸ்வர்: அக். 27-
மோந்தா புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகியவை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது இன்று தீவிர புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு மோந்தா என்று பெயரிடப்பட்டு உள்ளது. நாளை மாலை அல்லது இரவில் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப் பட்டு உள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி அனைத்துத் துறை அதிகாரி களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆந்திர முதல்வர் ஆலோசனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று காணொலி வாயிலாக மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். குறிப்பாக புயல் மழையின்போது மின்சாரம், தொலைத்தொடர்பு, குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது தொடர்பாக அந்தந்த துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஏரி, குளம், கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். ஆந்திராவின் காகுளம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, காக்கிநாடா, நெல்லூர், திருப்பதி, சித்தூர், பிரகாசம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. மோந்தா புயல் காரணமாக இந்த 30 மாவட்டங்களில் உஷார் நிலை அமல் செய்யப்பட்டு இருக்கிறது. மால்கன்கிரி, கோரபுட், ராயகடா, கஜபதி, கஞ்சம் உள்ளிட்ட7 மாவட்டங்களில் அக்டோபர் 27, 28, 29-ம் தேதிகளில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் அரசு ஊழியர்களின் விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மோந்தா புயலின் பாதையைமிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஆந்திரா, ஒடிசா, தமிழகத்தை சேர்ந்த பேரிடர் மீட்புப் படைகளும் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக ஆந்திரா, ஒடிசாவில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை தப்பியது: புதிதாக உருவாகும் மோந்தா புயல் சென்னையை நோக்கிய திசையில் இருந்து விலகி ஆந்திர கடல் பகுதியை நோக்கி நகரத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தீவிர புயல் பாதிப்பில் இருந்து சென்னை தப்பி உள்ளது.















