
புதுடெல்லி, அக். 28- டெல்லியில் யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நெகி ஆற்றில் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில், யமுனை ஆற்றின் தூய்மை சீர்கேடு அரசியலாகியுள்ளது. இந்நிலையில், யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டெல்லி பட்பர்கஞ் தொகுதி பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நெகி பங்கேற்றார். அப்போது அவர் ஆற்றங்கரையில் இரண்டு கைகளிலும் தண்ணீர் பாட்டில்களுடன் நின்றுபடி ரீல் எடுக்க முயற்சித்தார். ஆனால் எதிர்பாராமல் அவர் ஆற்றில் விழுந்தார். சுற்றியிருந்த அவரது ஆதரவாளர்கள் அவர் கரங்களைப் பற்றி இழுக்கும் முன்னர் நெகி ஆற்றில் விழுந்தார். அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா, “பொய், புரட்டு அரசியலால் அதிருப்தியடைந்த யமுனைத் தாய், பாஜக எம்எல்ஏவை தன்னுள் இழுத்துக் கொண்டாள் போல!” என்று கிண்டலாகப் பதிவிட்டார். டெல்லியில் சத் பூஜை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த விழா யமுனை ஆற்றங்கரையில் நடைபெறும்.
யமுனை ஆற்றின் தூய்மைக்கேட்டை ஆம் ஆத்மி சுட்டிக்காட்டி வரும் நிலையில், பாஜக எம்எல்ஏவின் ரீல் முயற்சி பூமராங் ஆகி பாஜகவையே பதம் பார்த்துள்ளது. முன்னதாக கடந்த வார இறுதியில் டெல்லி ஆம் ஆத்மி தலைவர் சவுரவ் பரத்வாஜ், முதல்வர் ரேகா குப்தா யமுனை ஆற்று நீரைப் பருகி அதன் சுத்தத்தை உறுதிப்படுத்துவாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவர் முதல்வர் இல்லத்துக்கு யமுனை ஆற்றுத் தண்ணீர் அடங்கிய பாட்டிலுடன் சென்று பரபரப்பையும் ஏற்படுத்தியிர்ந்தார். “இது யமுனை ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர். இதனை முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொடுக்க விரும்புகிறோம். யமுனை ஆறு தூய்மையாக இருக்கிறது என்றால் அவர் இதைக் குடிக்க வேண்டும்.” என்று கோரினார்.















