திருவனந்தபுரம், நவ. 1- பிரபல நடிகர் மம்மூட்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் அமெரிக்காவில் தங்கி 8 மாதம் சிகிச்சை பெற்றார்.
சிகிச்சை முடிந்து அவர் கேரளா திரும்பி உள்ள நிலையில் அவர் பூரண குணமடைய வேண்டும் என்று அவரது நண்பரும், ஆர்எஸ்எஸ் பிரமுகருமான ஒருவர் கோவிலுக்கு தங்க குடம் வழங்கி சிறப்பு பூஜை செய்தது அனைவரையும் நெகிழ வைத்தது. நடிகர் மம்மூட்டி கடந்த ஆண்டு இறுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் அமெரிக்கா சென்றிருந்தார். அனைத்து படப்ப்பிடிப்புகளை விட்டு அவர் அமெரிக்கா சென்றார். இதற்கு முக்கிய காரணம் அவரது உடல்நலம் தான் என்று கூறப்பட்டது. மேலும் அவர் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் மம்மூட்டி எந்த மாதிரியான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்? அவருக்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது? என்பது பற்றி எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. தற்போது மம்மூட்டி கேரளா திரும்பி உள்ளார்.
இந்நிலையில் தான் நடிகர் மம்மூட்டி பூரணமாக குணமடைய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பிரமுகரும், அகில பாரதிய சம்பர்க் குழுவின் உறுப்பினருமான ஏ ஜெயக்குமார் கோவிலில் சிறப்பு பூஜை செய்துள்ளார். கேரளாவின் கண்ணூரில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் தாலிபரம்பா டவுனில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இது நெய் விளக்கு மற்றும் பொன்னி குடம் (தங்ககுடம்) காணிக்கை பூஜை உள்ளிட்டவற்றுக்கு புகழ் பெற்ற கோவிலாகும். இந்தக் கோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது சேர சாம்ராஜ்ஜியத்தின் பிரதான தெய்வமாகவும்,
கொளத்துநாடு சூரிய வம்சத்தின் காவல் தெய்வமாகவும் இருந்தது. கி.பி 1014 மற்றும் கி.பி 1044 க்கு இடையில் ராஜேந்திர சோழன் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த கோவிலில் தான் ஜெயக்குமார், நடிகர் மம்மூட்டிக்காக சிறப்பு பூஜை செய்தார். இந்த பூஜையின்போது ஜெயக்குமார், தங்க குடத்தை காணிக்கையாக வழங்கினார். முன்னதாக, ஜெயக்குமார் கோவிலுக்கு சென்றவுடன் அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். கடவுள் ராஜராஜேஸ்வராவின் போட்டோ பிரேமை வழங்கி வரவேற்றனர். மேலும் நடிகர் மம்மூட்டி இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் குணமாக வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பிரமுகர் இந்து கோவிலில் தங்க குடம் காணிக்கை வழங்கி சிறப்பு பூஜை செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மம்மூட்டியும், ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஜெயக்குமாரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பது தான்.















