
மும்பை, நவ. 3- கவுதம் கம்பீர் வந்த பிறகே அவர் யாரை உட்காரவைத்து உட்காரவைத்து மீண்டும் அணியில் எடுக்கிறாரோ அவர்கள் கம்பீருக்கு பாடம் புகட்டுமாறு தங்கள் செயல் திறனை நிரூபித்து வருகின்றனர். நேற்று அப்படி நிரூபித்தவர்கள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இன்னொருவர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். ஆகவே, உட்கார வைத்து எடுத்தால் நன்றாக ஆடுவார்கள் என்று இதற்கு கம்பீர் சப்பைக் கட்டுக் கட்ட முடியாது. மாறாக, ஏன் அணியை இப்படி நிரந்தரமில்லாத அந்தரங்க நூல் போல் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே கேள்வி. இவையெல்லாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் வரை தெரியாது, ஒருமுறை தொடர் தோல்விகளைச் சந்திக்கும்போது கம்பீரின் சாயம் வெளுக்கும். டி20-யில் அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் ஆகச் சிறந்த பவுலர். 66 போட்டிகளில் 104 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 50 விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் இந்திய பவுலர்களில் டி20-யில் குல்தீப் யாதவ் மட்டுமே அர்ஷ்தீப்பை விட நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர். இன்னொரு கோடரி விழும் வீரர் குல்தீப் யாதவ். இப்படியிருந்தும் அர்ஷ்தீப் சிங் டி20 அணியில் ரெகுலர் என்று கூற முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று ஹோபார்ட்டில் அர்ஷ்தீப் சிங் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனால் அவரும் ட்ராவிஸ் ஹெட், ஜாஷ் இங்லிஷ் ஆகிய அபாய அதிரடி வீரர்களை சடுதியில் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பினார். அர்ஷ்திப் முதல் 2 போட்டிகளில் இல்லை.வேடிக்கை என்னவெனில் அர்ஷ்தீப், வாஷிங்டன், குல்தீப் போன்றோர் ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அரிய வாய்ப்புகளிலும் நிரூப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது சில வீரர்கள் கேள்வியின்றி தோல்வி அடைந்தாலும் அணியில் நீடிக்கின்றனர். உதாரணமாக ஷுப்மன் கில். ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா, அக்சர் படேல். இதில் அக்சர் படேல் ஏதோ ஒரு விதத்தில் இன்றியமையாதவர் ஆகிவிட்டார். ஷுப்மன் கில் சொல்லி சொல்லி தோல்வியடைந்தாலும் அணியில் நீடிப்பார். ஆனால் சஞ்சு சாம்சனை ஒருவழியாக மெல்ல மெல்ல டவுன் ஆர்டரை மாற்றி, அதை இதை மாற்றி ஒழித்தாகிவிட்டது.




















