ரூ.1.3 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞர்

ஜெய்ப்பூர், நவ. 3- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், தனது நிரந்தரமான வேலையை விட்டுவிட்டு, சொந்தமாக விடுதிகள் (Homestays) தொடங்கி, தற்போது தனது முந்தைய சம்பளத்தை விட அதிக வருமானம் ஈட்டி வருவதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள தகவல் விவாதத்தை கிளப்பியுள்ளது. எனது வேலையை விட்ட பிறகு, எனது மாத வருமானம் பழைய சம்பளத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளதாக சமூக வலைதளமான ரெடிட் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதல் வருடம் போராட்டம்தான் :அந்தப் பதிவில், அந்த இளைஞர் தான் கடந்த ஆண்டு மாதம் ரூ.1.3 லட்சம் சம்பாதித்த வேலையை விட்டு விலகினேன். பின்னர், ராஜஸ்தானில் விடுதிகள் தொடங்க முடிவெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். பெரிதாக எந்தத் திட்டமும் இல்லாமல், சொந்தமாக எதையாவது உருவாக்க வேண்டும், அதிகம் பயணிக்க வேண்டும் என்ற ஆசையே இந்த முடிவுக்குக் காரணம் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார். தொடக்கத்தில் சில மாதங்கள் முழுமையான சந்தேகம் மற்றும் நிலையற்ற வருமானத்துடன் இருந்தன. சில நேரங்களில் மிகவும் பயமாக இருந்தது என்று அவர் தனது போராட்ட காலம் குறித்தும் தெரிவித்துள்ளார். சேமிப்பு, பொறுமை, மந்தமான மாதங்கள் என எல்லாவற்றையும் கஷ்டப்பட்டு கற்றுக்கொள்வதற்கு ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால், தற்போது அதற்கெல்லாம் பலன் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். இரட்டிப்பான வருமானம் : இந்த மாதம், ஏர் பிஎன்பி (Airbnb) முன்பதிவுகள் மூலம் மட்டுமே அந்த இளைஞருக்கு ரூ.2.18 லட்சம் கிடைத்துள்ளதாகவும், அவரது மொத்த வருமானம் ரூ.2.5 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது அவரது முந்தைய நிறுவனச் சம்பளத்தை விட கிட்டத்தட்ட இரட்டிப்பு ஆகும். “இது ஒரே இரவில் கிடைத்த வெற்றி அல்ல. பயமும் நிச்சயமற்ற தன்மையும் இருந்த ஓராண்டு காலத்துக்கு முன், இதுபோன்ற வெற்றிக் கதைகள் எனக்கு நம்பிக்கை அளித்தன. அதுபோன்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கும் அளிப்பதற்காகவே இந்தப் பதிவை போடுகிறேன்” என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.