
லக்னோ: நவ. 4 –
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள பதேபூர் சாலையில், வேகமாக வந்த லாரி மீது ஒரு கார் மோதியது. கார் முழுவதுமாக நசுங்கி, பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அலறல் சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நடந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் டிரைவர் ஸ்ரீகாந்த் சுக்லா, பிரதீப் ரஸ்தோகி (60), நிதின் (45), நைமிஷ் (25), கிருஷ்ணா (15), மற்றும் பிரதீப்பின் மனைவி மாதுரி (58) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அனைவரும் பதேபூரைச் சேர்ந்தவர்கள். பித்தூருக்கு பயணம் மேற்கொள்வதற்காக, உள்ளூர் வாகன உரிமையாளர் கோபால் மூலம் பிரதீப் ரஸ்தோகியின் குடும்பத்தினர் இந்த காரை முன்பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், கார் தவறான பாதையில் சென்று லாரி மீது மோதியிருக்கலாம், ஒருவேளை டிரைவர் தூங்கிவிட்டதால் விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்து நள்ளிரவு நிகழ்ந்துள்ளது. துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.















