
நியூயார்க்: நவம்பர் 4-
அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லை என்று கூறி, 7,000 லாரி டிரைவர்களை நீக்கி அந்நாட்டு போக்குவரத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். விசா கட்டுப்பாடுகள், குடியேற்ற விதிகள் என பல கெடுபிடிகளை காட்டி வரும் நிலையில், லாரி டிரைவர்களுக்கான விசா வழங்குவதும் சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே விபத்துகள் அதிகரிப்பதாகக் கூறி, ஆங்கிலத்தில் பேசுவது, படிப்பதை அமெரிக்க அரசின் போக்குவரத்துத் துறை கட்டாயமாக்கியது. லாரி டிரைவர்களுக்கு எழுத்துப் பரீட்சை மற்றும் சாலை உத்தரவுகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதும் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் பேச்சு திறனும் அவசியம் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.
இது பெரும்பாலும் இந்தியர்களையே பாதித்தது. அமெரிக்காவில் லாரி டிரைவர்களாக, இந்தியர்கள், குறிப்பாக சீக்கியர்களே அதிகளவில் பணியாற்றுகின்றனர்.
அங்கு, ஒன்றரை லட்சம் சீக்கியர் லாரி ஓட்டுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாத நிலவரப்படி, டிரம்ப் உத்தரவிட்டபடி ஆங்கில புலமைத் தேர்வில் தேர்ச்சி பெறாத 7,248 லாரி டிரைவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக அமெரிக்க போக்குவரத்து அமைச்சர் சீன் டபி தெரிவித்துள்ளார்.

















