பணம் நிறைய இருந்தால் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதிகப் பணம் வந்த பிறகு தங்கள் வீட்டில் சந்தோஷம் போய்விட்டது என்று 21 வயது இளைஞர் சமூக வலைதளத்தில் (ரெடிட்) உருக்கமான பதிவைப் போட்டுள்ளார். இப்போது சுமார் 50 வயதாகும் அவருடைய அப்பா, தற்போது வருடத்திற்கு ரூ. 1 கோடிக்கு அருகில் சம்பாதிக்கிறார். ஆனால், 2010-ஆம் ஆண்டில் அவருடைய சம்பளம் வெறும் ரூ. 3.2 லட்சம் மட்டுமே. அந்தப் பழைய சம்பளச் சீட்டுகளைப் பார்த்தபோதுதான்,
அந்த இளைஞருக்குப் பல விஷயங்கள் நினைவுக்கு வந்துள்ளன.
குறைந்த வருமானத்தில் நிறைந்த சந்தோஷம் : “அப்பா குறைந்த சம்பளம் வாங்கிய 2010-ஆம் ஆண்டில் தான், எங்கள் வீட்டில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தோம்” என்று அந்த மகன் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். அந்த சிறிய வருமானத்தில் கூட, அவர்கள் குடும்பமாக வாரந்தோறும் கடை வீதிக்கு சென்றிருக்கிறார்கள், சினிமா பார்த்திருக்கிறார்கள், நல்ல உணவகங்களில் சாப்பிட்டிருக்கிறார்கள். அப்போது ஃபேஷனாக இருந்த பிஎஸ்பி, எக்ஸ்பாக்ஸ் போன்ற விளையாட்டுச் சாதனங்களை கூட அப்பா வாங்கி கொடுத்திருக்கிறார். பணப் பற்றாக்குறை இருந்தாலும், அதைப் பற்றி அவர் எங்களை ஒரு நாளும் உணர வைத்ததே இல்லை. எப்போதும் வீட்டை மகிழ்ச்சியாக வைத்திருந்தார் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார். இந்த சூழலில், சுமார் 2017-18 காலகட்டத்தில் இருந்து தங்கள் வீட்டில் நிலைமை மாறத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்பமாக வெளியே செல்வது நின்றுபோனது. தந்தையின் சம்பளம் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. தற்போது ரூ.1 கோடிக்கு அருகில் சம்பாதித்தாலும், வீட்டில் யாருமே சந்தோஷமாக இல்லை. முன்பு இருந்த சிரிப்பும், அன்பான பேச்சும் குறைந்து, சண்டைகளும் சத்தமும் நிரந்தரமாகிவிட்டன.
“இவ்வளவு பணம் வீட்டில் இருக்கிறது. ஆனால் சந்தோஷம் இல்லை. சண்டைகள் அதிகமாகிவிட்டன. குறைவான வருமானம் இருந்தபோது, மன அழுத்தத்தில் இருந்து எங்களைப் பாதுகாத்த அப்பாவைப் போல என்னால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.
இப்போது இவ்வளவு பணம் இருந்தும் எங்கள் குடும்பம் உடைந்து கிடக்கிறது” என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார். தற்போது அவரது அம்மா – அப்பா இருவரும் சரியாகப் பேசிக்கொள்வதில்லை என்றும், தானும் பெற்றோரிடம் இருந்து விலகியிருப்பதாகவும், கல்லூரி முடிந்ததும் வீட்டை விட்டு வெளியேற திட்டமிடுவதாகவும் அவர் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். பணம் பெருகியபோது குடும்பப் பிணைப்பு குறைந்த இந்த நிகழ்வு, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நெட்டிசன்கள் கருத்து : இளைஞரின் இந்த பதிவுக்கு பதிலளித்த பலரும், “பணம் வாழ்க்கைக்கு அவசியம், ஆனால் மன அமைதியும் சந்தோஷமும் மிக முக்கியம் என்று கூறியுள்ளனர்.
ரூ.3.2 லட்சம் என்பது அன்றைய காலத்தில் நல்ல சம்பளம்தான். இப்போதைய மதிப்பில் அது கிட்டத்தட்ட ரூ.9 லட்சம் இருக்கும்” என்று சிலர் கணக்கிட்டு கூறியுள்ளனர். ஆனாலும், வயது ஏறும்போது வரும் மன அழுத்தமும், பொறுப்புகளும்தான் குடும்ப உறவுகளை பாதிக்கிறது என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியும் சந்தோஷமில்லை.. பணத்தால் உடைந்த குடும்பம்















