சென்னை: நவ. 8 –
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடி சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சகோதரரின் உடல்நிலை குறித்து விசாரிக்கவும், அவரது உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும் ரஜினிகாந்த் பெங்களூர் வந்துள்ளார்.
சூப்பர்ஸ்டாராக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 84.
இதை அறிந்த ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூருக்கு புறப்பட்டு வந்து, சகோதரரை நேரில் சந்தித்துள்ளார். ரஜினியின் சினிமா வாழ்க்கையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சத்யநாராயணா. அவரது உடல்நிலையை மேம்படுத்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ரஜினிகாந்த் பஸ் கண்டக்டராக இருந்து பிறகு சென்னைக்கு வந்து சினிமா கல்லூரியில் படித்து நடிகராக மாறியவர். அப்படி அவர் சென்னைக்கு வருவதற்கும், பின்னாட்களில் சூப்பர்ஸ்டாராக வளர்வதற்கும் இரண்டு பேர் முக்கிய காரணங்களாக இருந்தார்கள். ஒருவர் அவரது நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர். மற்றொருவர் அவரது சகோதரர் சத்யநாராயணா கெய்க்வாட் என்பது குறிப்பிடத்தக்கது.















