கொத்தாக மக்களை கொல்ல திட்டம்

டெல்லி: நவம்பர் 12-
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் வெடித்த வழக்கில் 13 பேர் பலியாகினர். மேலும் 15க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அம்மோனியம் நைட்ரேட் மற்றும் டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வெடிகுண்டுக்கு பதில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தியது ஏன்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் 1வது நுழைவு வாயிலில் நேற்று மாலை 6.52 மணிக்கு சென்று கொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. பயங்கர சத்தத்துடன் வெடித்த காரில் இருந்து தீப்பிழம்பு பலமீட்டர் உயரத்திற்கு வானத்தில் பரவியது. இதில் டூவீலர்கள், கார்கள், மின்சார வாகனம் என்று 13 வாகனங்கள் எரிந்தன. இந்த கார் வெடிப்பில் 9 பேர் பலியான நிலையில் 20 பேர் காயமடைந்தனர். அதன்பிறகு 4 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி போலீசாருடன், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையை தொடங்கி உள்ளது. டெல்லி கோட்வாலி போலீசார் ‛உபா’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர் உமர்? இதற்கிடையே, தான் வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 கார் மற்றும் அதனை ஓட்டி சென்றவர் பற்றி அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் புதியதகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. டெல்லியில் கார் வெடிப்பை நிகழ்த்தியவர் டாக்டர் உமர் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவரது போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.
கொத்து கொத்தாக மக்கள் பலியான வரலாறு முன்னதாக கடந்த 2020ல் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டு இருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 135 பேர் பலியாகினர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அதற்கு முன்பாக கடந்த 2015-ம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற விபத்தில் அம்மோனியம் நைட்ரேட் உள்பட வேதிப்பொருள் வெடித்தது. இதில் 173 பேர் பலியாகினர். அதேபோல் அமெரிக்காவில் 1947ம் ஆண்டு டெக்ஸாஸ் மாகணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அமோனியம் நைட்ரேட் வெடித்தது. இதில் 581 பேர் பலியாகினர். மேலும் 1921ம் ஆண்டில் ஜெர்மனியில் அமோனியம் நைட்ரேட் வெடி பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 500 பேர் பலியாகினர். இப்படி அம்மோனியம் நைட்ரேட் வெடித்தால் பேரழிவை தரும் என்பதாலே டெல்லி கார் வெடிப்புக்கு அது பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.