ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள பிரச்சனை

சென்னை, நவ. 12- ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையேயான வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தம், சில முக்கிய காரணங்களால் தாமதமாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை அணிக்கும்,
சென்னை அணியின் நட்சத்திர வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தான் அணிக்கும் பரிமாற்றம் செய்யும் இந்த மெகா ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு விதிமுறையால் ராஜஸ்தான் அணிக்குச் சிக்கல் எழுந்துள்ளது.
அதிகபட்ச வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை விதியை மறந்து சாம் கரண் வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கேவிடம் மல்லுக்கட்டியதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஐபிஎல் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு அணியும் தங்களது பட்டியலில் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே வைத்திருக்க முடியும். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம்எட்டு வீரர்கள் உள்ளனர். எனவே, அந்த அணியின் வெளிநாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு நிரம்பியுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான சாம் கரணை அணிக்குள் கொண்டு வர வேண்டுமானால், ஏற்கெனவே உள்ள வெளிநாட்டு வீரர்களில் ஒருவரை ராஜஸ்தான் அணி விடுவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவே ஜடேஜா, சாம் கரண் – சஞ்சு சாம்சன் வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தம் நிறைவேறுவதில் தற்போதைய முக்கியத் தடையாகக் கருதப்படுகிறது.
இந்தச் சிக்கலைச் சமாளிப்பதற்காக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தங்களது அணியில் இடம் பெற்றுள்ள இலங்கை சுழற்பந்து வீச்சு இரட்டையர்களான மஹீஷ் தீக்ஷனா மற்றும் வனிந்து ஹசரங்காவை அணியில் இருந்து விடுவிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தீக்ஷனாவை ₹4.40 கோடிக்கும், ஹசரங்காவை ₹5.25 கோடிக்கும் வாங்கியிருந்தது. தற்போது சாம் கரணுக்கு வழிவிடும் நோக்கில் இந்த இருவரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ விடுவிக்க அந்த அணி பரிசீலித்து வருகிறது.