
புதுடெல்லி: நவ. 13-
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 மருத்துவர்களில் 2 பேர், துருக்கியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்களை சந்தித்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாயின. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ‘ஒயிட் காலர் தீவிரவாதத்தை’ முறியடிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல் துறை இணைந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றன.
அதன் ஒரு பகுதியாக இந்த தாக்குதலை முன்னின்று நடத்திய மருத்துவர் உமர் முகமது நபியின் நெருங்கிய
நண்பர் மருத்துவர் முஜம்மில் ஷகீல் மற்றும் மருத்துவர் ஆதில் அகமது ராதர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஹரியானாவின் பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள், ஏகே 47 துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் போலீஸார் கைப்பற்றினர்.
மருத்துவர்களான உமர், முஜம்மில், ஆதில் ஆகிய மூவரும் பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் பல மாதங்களாக
நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர்.
இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களை மேற்கூறிய 3 பேரில் 2 பேர் துருக்கியில் சந்தித்து சதி ஆலோசனையில் ஈடுபட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹுண்டாய் ஐ20 காரைத் தவிர, தீவிரவாத தாக்குதலுக்கு மேலும் 2 கார்களை அந்த மருத்துவர்கள் வாங்கியுள்ள தகவலும் வெளியாகி உள்ளது. இதுகுறித்தும் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கார் குண்டுவெடிப்பில் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதும், அவர்கள் ஜெய்ஷ்
இ முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், இந்த தாக்குதலில் பெண்கள் ஈடுபட்டதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.















