
கரூர்: நவ. 13-
தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 பேர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, வேலுசாமிபுரத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள், பல்வேறு துறை அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர். நேற்று முன்தினம் 3 பேர் ஆஜரான நிலையில், நேற்று தாந்தோணிமலை சரவணகுமார் உள்ளிட்ட 6 பேர் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்தனர்.















